தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சியின் பல்வேறு வார்டுகளில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் தூய்மை பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக காரிமங்கலம் சந்தை திடலில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி சேர்மன் பி சி ஆர் மனோகரன், துணை சேர்மன்கள் சூர்யா தனபால், சீனிவாசன் ஆகியோர் தூய்மை பணிகளை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்நது தூய்மை பணியாளர்கள் பங்கேற்று உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்தி, ரமேஷ், மாதப்பன், சிவக்குமார், பிரியா சங்கர், ராதா ராஜா, இந்திராணி ராமச்சந்திரன், தலைமை எழுத்தர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.