பென்னாகரம்

Jun 08, 2025, viewer - 1515, சரவணன்   நிருபர் (தருமபுரி).

பென்னாகரம் அருகே மலைவாழ் மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மலைவாழ் மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தை முன்னிட்டு பென்னாகரம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மலைவாழ் மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் பென்னாகரம் போடூர் செக்போஸ்ட் பகுதியில்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும்,மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி ஜே.நாகலட்சுமி (எ) விஜயராணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.வட்ட சட்ட பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் சந்தானம் அனைவரையும் வரவேற்று பேசினார்.இதில் பென்னாகரம் வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி, இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன்,ஒகேனக்கல் வனசரக அலுவலர் சிவகுமார் மற்றும் பென்னாகரம் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து  கொண்டு பேசினார்கள்.பென்னாகரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மகாலிங்கம்,செயலாளர் பால சரவணன்,வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகள் சி.மாதையன், வீராசாமி,மூத்த வழக்கறிஞர்கள் ஜி.அசோகன்,சரவணன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு மலைவாழ் மக்கள் மத்தியில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்கள்.

 

நிறைவாக, வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும்,மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் திருமதி. ஜே.நாகலட்சுமி (எ) விஜயராணி அவர்கள் மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்து,வன உரிமைகள் சட்டம் குறித்தும்,அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள வனத்திற்குள் சென்று தங்களுக்கு தேவையான வனவிளை பொருட்களை சேகரிக்கும் உரிமைகள் குறித்தும்,காடுகள் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதியில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்தும்,வனப்பகுதியில் இருந்து சேகரிக்கும் பொருட்களைக் கொண்டு அவற்றை மதிப்பு கூட்டும் பொருளாக எவ்வாறு தயாரிப்பது அதன் மூலம் எவ்வாறு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்பது குறித்தும், வருவாய் துறை சார்ந்த தங்களின் அடிப்படை தேவைகளை எவ்வாறு பெற வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றினார். தொடர்ந்து மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்றும் அங்கிருந்த துறை சார்ந்த அலுவலர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட அப்பகுதி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தேவையான எழுது பொருட்களை வழங்கினார்.

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.