தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு100 நாள் வேலை திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் பணி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் தேவராஜன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் கோரிக்கை விளக்க உரையாற்றினார். 100 நாள் வேலைத்திட்ட பணிக்கு ஆண்டுக்கு 4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்,100 நாள்வேலைத் திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி அதன் ஊதியம் 700 ஆக வழங்க வேண்டும், வீட்டுமனை பட்டா இல்லாத குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும்,நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
பென்னாகரம் பேரூராட்சியுடன் பருவதனஅள்ளி ஊராட்சியை இணைக்க கூடாது, கூத்தப்பாடி ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றாமல் 100 நாள் வேலைத் திட்டம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி சங்கீதா, புதிதாக பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கூத்தப்பாடி, பென்னாகரம் பேரூராட்சியுடன் இணைக்கவுள்ள பருவதனஅள்ளி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி உடன் மாதேஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு வேலை வழங்குவது குறித்து பரிந்துரை கடிதங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கோபால், வட்டார செயலாளர்கள் பெருமாள், வெங்கடேசன், மற்றும்100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.